இலங்கைப் பெண்கள் 150 பேருக்கு ஓமானில் என்ன நடந்தது? – ஸ்ரீநேசன் கேள்வி.
“பெண்ணடிமைகளாக இலங்கைப் பெண்கள் ஓமானில் விற்கப்பட்டுள்ளார்களா?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் இங்குள்ள முகவர்கள் சிலரால் வீட்டுப் பணிப்பெண்களுக்கான தொழில்வாய்ப்பு என்ற வகையில் ஏமாற்றப்பட்டு டுபாயின் ஊடாகக் கொண்டு சென்று ஓமானில் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.150 பெண்கள் இவ்வாறு பெண்ணடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகின்றது.
சுற்றுலா விசா மூலமாக டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுப் பின்னர் ஓமானுக்குக் கொண்டு சென்று ஒவ்வொரு பெண்ணும் 18 இலட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் ஊடகங்களுக்கு வந்துள்ளது.
இந்தப் பெண்கள் அடிப்படை வசதிகள் இல்லாத சுகாதாரமற்ற சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதிலுள்ள உண்மைகளை அறிந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசின் பொறுப்பு மிக்க அமைச்சர்கள் அதிகாரிகளைக் கோருகின்றோம்.
இந்தப் போக்கானது எமது பெண்களின் கெளரவத்தை மட்டுமல்லாமல், நாட்டின் கெளரவத்தையே பாதிக்கும் செயல் என்பதை அரசு உணர வேண்டும்.
இந்தத் தகவலானது பாதிக்கப்பட்ட பெண்களின் ஒளிப்பதிவுகள் மூலமாக வெளியானது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் வெளிவரவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இனவாத, மதவாத விசப்பரீட்சைகளில் ஆட்சியாளர்கள் தேறுகின்றார்கள். ஆனால் எமது மக்கள் பொருளாதார வறுமையால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
நாடும் மக்களும் அடிமைகளானால் ஆட்சியாளர்கள் எப்படி எஜமானர்களாக இருக்க முடியும். இனவாத அரசியலானது சமூக, கலாசார, பொருளாதார அனைத்து விடயங்களையும் நாசப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
கைகட்டிப் பிச்சை எடுத்தால் அவனைப் பிச்சைக்காரன் என்கின்றோம். ஆனால் ரை கட்டிப் பிச்சை கேட்டால் அவர்கள் தலைவர்களாகச் சொல்லப்படுகின்றார்கள். இது எப்படி இருக்க முடியும்?
நாட்டு மக்களை வறுமைக்குள் தள்ளியவர்கள் பெருமைக்குரிய தலைவர்களாக இருக்க முடியாது. சிறுமைக்குரிய சீரழிப்பார்களர்கவே கொள்ள முடியும்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.