எல்லை நிர்ணயம் மூலம் தமிழ்ப் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பா? – செல்வம் எம்.பி. கேள்வி.
எல்லை நிர்ணயம் மூலம் தமிழ்ப் பிரதேசங்களைப் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுடன் இணைக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் (07) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வவுனியாவில் பல கிராமங்களை அனுராதபுரத்துடன் இணைக்கும் செயற்பாடாகவும், திருகோணமலையின் சில பிரதேசங்களைப் பொலனறுவையுடன் இணைக்கும் செயற்பாடாகவும், தமிழ்ப் பிரதேசங்கள் பெரும்பான்மையினருடைய பிரதேசங்களுக்குள் உள்வாங்குவதற்கான செயற்பாடாகவும், எங்களது பிரதேசங்களைக் காவுகொள்ளக்கூடிய நிகழ்ச்சி நிரலிலே எல்லை நிர்ணயம் இடம்பெறலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
இந்த எல்லை நிர்ணயம் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இருப்பதோடு இது தொடர்பாக மக்களுடனும், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அத்துடன் ஐந்து பேரை உள்ளடக்கிய எல்லை நிர்ணய குழு தனித்து, தன்னிச்சையாகத் தங்களது முடிவை எடுத்துச் செயற்படுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். மேலும் இதன் ஊடாக உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான நிலையும் காணப்படுகின்றது.
அத்துடன் தற்போது நகர சபை மாநகர சபையாகவும், பிரதேச சபை நகர சபையாகவும் மாற்றப்பட்டுள்ளது. எல்லை நிர்ணம் செய்யாமல் எவ்வாறு சபைகளைத் தரமுயர்தினார்கள் என்பது கேள்வி எழுந்துள்ளது. ஆனால், எல்லை நிர்ணயத்தைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடித்து தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்.
காலத்தைப் பின்னடிக்காது உடனடியாக ஒரு கால எல்லைக்குள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதனை மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் காணப்பித்து தேர்தலை நடத்த வேண்டும். மக்களது பொதுவான அபிப்பிராயத்தை பெறுவதற்காகத் தேர்தல்களை பின் போடாது நடத்துவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவினர் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீள தமது செல்வாக்கை நிலைநிறுத்த முற்படுபகின்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தைப் பேசிக் கொண்டு மஹிந்த ராஜபக்சவினர் சொல்லும் செயற்பாட்டைச் செய்யக் கூடாது. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு பலரிடம் இருக்கின்றது. இதனை ஜனாதிபதி மாற்ற வேண்டும்” – என்றார்.