சந்திர கிரகணத்தின்போது பிரியாணி.. அடிதடியில் முடிந்த உணவு திருவிழா!
சந்திரகிரகணத்தின் போது உணவு உண்ணலாமா? வேண்டாமா என்பது குறித்து ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
வானில் நிகழும் இயற்கையான அறிவியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வானில் நிகழும். ஆனால் இந்த சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை மையப்படுத்தி ஆன்மீக ரீதியாக பல்வேறு நம்பிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது, உணவு சாப்பிடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் இந்தியா முழுவதுமே பின்பற்றப்படுகிறது. அறிவியல் ரீதியாக இவையெல்லாம் உண்மையா இல்லையா என நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் பொதுமக்களில் பெரும்பாலானோர் இந்த நம்பிக்கையை பின்பற்றுகிறார்கள்.
ஆனால் இவையெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகைள் என சில சிலர் வாதம் செய்து வருகிறார்கள். நேற்று மாலை சந்திரகிரகணம் ஏற்பட்ட நிலையில் ஒடிசாவில் இது தொடர்பான வாதங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான வாதங்கள் அனல் பறந்தன. ஆனால் வாதத்தின் உச்சகட்டமாக நேற்று புவனேஷ்வர் மற்றும் பெர்ஹாம்பூர் பகுதிகளில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று சந்திரகிரகணம் நிகழும் நேரத்தில் குழுவாக கூடி உணவு உண்ணும் பிரியாணி திருவிழா புவனேஷ்வரில் உள்ள லோஹியா அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதோடு கிரகணம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது.
கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் அரங்கும் முன்பு திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். அரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழித்து எரியப்பட்டன. இதனால் ஆத்திரமமைடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
கார்த்திகை பவுர்ணமி மற்றும் சந்திரகிரகணத்தின் போது விரதம் இருக்கும் தங்களது நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக பகுத்தறிவுவாதிகள் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் இது மூடநம்பிக்கை என்பதை பொதுமக்களுக்கு நிரூபிக்கும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் வாதிட்டனர். இப்படி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒடிசாவில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்னிட்டு இது போன்ற சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. மற்ற நிகழ்வுகளில் இரு தரப்பினரும் வெறும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடுவர். ஆனால் ஒடிசாவில் தங்கள் நம்பிக்கை காப்பாற்றுவதற்காக சிலர் அடி தடியில் இறங்கியுள்ளனர். ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இது போன்ற பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.