கூட்டமைப்பு எம்.பிக்கள் ஓரணியில்! – சர்ச்சைகளுக்குச் சம்பந்தன் பதிலடி.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு, பிளவு என்று எடைபோடக் கூடாது.
உண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும், பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள்” – என்றார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பந்தன் கருத்து வெளியிடும் போது,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடாது உரிய காலத்தில் அதை அரசு நடத்த வேண்டும். அதேவேளை, மாகாண சபைத் தேர்தலையும் அரசு விரைந்து நடத்த வேண்டும்.
எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது” – என்றார்.