கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் மலேசியாவுக்கு விமானம் மூலம் சென்று, படகு மூலம் வேறொரு நாட்டுக்கு செல்வதற்காகப் பயணித்துள்ளனர். இவர்கள் கனடாவுக்குச் செல்லவே முயற்சித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
படகில் ஏறுவதற்கு முன் ஆள்கடத்தல்காரர்களுக்கு பெரும்தொகைப் பணம் கொடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
சேதமடைந்த மீன்பிடிக் கப்பல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அகதிகள் ஜப்பானுக்குச் சொந்தமான ‘ஹெலியோஸ் லீடர்’ என்ற கப்பலில் ஏற்றப்பட்டு, அங்கு வைத்து மருத்துவக் குழு ஒன்றால் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களில் சிலருக்கு நெரிசல் காரணமாகச் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயினும், பெரும்பாலானோர் ஆரோக்கியமான நிலையில் காணப்படுகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் அதிலிருந்து கடற்படைக் கப்பல்களுக்கு மாற்றப்பட்டனர்.
அகதிகள் 303 பேரும் கப்பலில் இருந்து பகுதி பகுதியாக இறக்கப்பட்டு கடற்படைக் கப்பல்கள் மூலம் வியட்நாம் நாட்டின் வுங் தோ நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அங்கு கரையோரக் காவல் படை முகாமிலும் இராணுவத் தளங்களிலும் உள்ள வாடி வீடுகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவர்கள் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சர்வதேசச் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, படகு மூலம் சென்றவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆள்கடத்தல்காரர்களால் தொடர்ந்தும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. அவர்கள் தொடர்ந்தும் கடற்பயணத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்றும், எதிர்பார்த்த நாட்டைச் சென்றடைவார்கள் என்றும் குடும்பங்களுக்குக் கூறப்பட்டு வருகின்றது என்று தெரிகின்றது.
ஆயினும் சட்டவிரோதப் படகுப் பயணங்கள் மூலம் பிற நாடுகளுக்குச் செல்ல முடியாது என்றும், அது தற்கொலைக்குச் சமமான பயணம் என்றும் சர்வதேச நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.