லேப்டாப் வைத்திருந்ததால் ரூ.10 கூடுதல் கட்டணம்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி.!

லேப்டாப் வைத்திருந்த பயணியிடம் அரசு பேருந்து நடத்துனர் கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலித்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநில அரசு பேருந்தில் பயணித்த நபர் இந்த புகாரை தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபரான மயூர் பாடீல், கடக் பகுதியில் இருந்து ஹூப்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.இவர் தனது பயணத்தின் போது டிக்கெட் பெற்றுக் கொண்டு சென்ற நிலையில், தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு வந்த நடத்துனர் லேப்டாப்பிற்கு லக்கேஜ் கட்டணம் ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றுள்ளார்.
அதிக எடை அல்லது சைஸ் கொண்ட லக்கேஜ்ஜுக்குத் தானே கட்டணம் தேவை லேப்டாப்பிற்கு எல்லாம் செலுத்த தேவையில்லை என வாக்குவாதம் செய்துள்ளார்.அதற்கு நடத்துனர் கர்நாடக அரசு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கையை காட்டி,அதில் 30 கிலோவுக்கு குறைவான லக்கேஜ்ஜுகளை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட பொருள்களின் விவரத்தை கூறினார். அதில் லேப்டாப்பை அரசு சேர்க்கவில்லை எனவே, கட்டணத்தை செலுத்த வேண்டும் என வாதிட்டு கட்டணத்தை வசூலித்துள்ளார்.அந்த சுற்றறிக்கையில், அரசி, காய்கறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்களுக்கு எல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், லேப்டாப்பிற்கு விலக்கு இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக பயணி கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு விவாதத்தை கிளப்பிய நிலையில், ” லேப்டாப் செல்போன் போன்ற கருவி தான் என்பதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த சம்பவம் விதிமுறை தொடர்பான குழப்பத்தில் நடந்து விட்டது போல என போக்குவரத்துத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.