இராணுவத்திடம் எனது கணவர் சரணடைந்ததை நேரில் கண்டேன் – எழிலனின் மனைவி அனந்தி தெரிவிப்பு.

“இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் சரணடையவில்லை எனக் கூறப்படுவது பொய்” – என்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி எழிலனின் மனைவியும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இறுதிப் போரில் தம்மிடம் விடுதலைப்புலிகள் எவரும் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பில், பி.பி.சியிடம் கருத்துரைக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி – அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் சென்ற எனது கணவர் எழிலன், இராணுவத்திடம் சரணடைந்ததை நான் நேரில் கண்டேன்.

முள்ளிவாய்க்காலில் இருந்து இராணுவம் அழைத்த இடத்துக்கு மக்களுடன் சேர்ந்து நானும் எனது மூன்று பிள்ளைகளும் வரிசையில் சென்றோம். அப்போது அரச உத்தியோகத்தருக்கான எனது அடையாள அட்டையை இராணுவத்தினரிடம் காட்டினேன்.

இராணுவ அதிகாரி ஒருவர் வந்து எனது அடையாள அட்டையைப் பார்த்து விட்டு, நீ இந்த வரிசையில் வரவேண்டாம், உனக்கான வரிசை அங்கேயுள்ளது எனக் கொச்சைத் தமிழில் கூறி, நான் நின்ற வரிசையிலிருந்து என்னையும் பிள்ளைகளையும் நீக்கி விட்டார்.

அப்போது அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் சென்று – இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் சற்று தூரத்தில் நின்றிருந்த எனது கணவர் எழிலன், என்னைப் பார்த்து, ‘நீ போ’ என்பது போல் தலையசைத்தார்.

முட்கம்பிகளுக்கு இந்தப் பக்கம் நாங்களும் அந்தப் பக்கம் அவர்களுமான இருந்தோம். அப்போது அங்கு நின்ற பஸ்களை நோக்கி எழிலன் உள்ளிட்டவர்களை இராணுவத்தினர் அழைத்துக் கொண்டு செல்வதை நான் பார்த்தேன்.

எழிலனை அழைத்துச் சென்றவர்கள் இராணுவ சிப்பாய்கள் இல்லை. இராணுவ உயர் அதிகாரிகளே எழிலனை அழைத்துச் சென்றார்கள்.

எழிலனுக்கு அருகாமையில் நாங்கள் நின்றிருந்த ஒரு சமயத்தில் ‘மாவிலாறு’ ‘எழிலன்’ எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டே எழிலனை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.

அந்த இடத்திலிருந்து பொதுமக்களை பஸ்கள் ஏற்றிக்கொண்டு சென்றன. அதில் நானும் பிள்ளைகளும் சென்றோம். ஓமந்தையில் ஓரிடத்தில் பஸ் தரித்து நின்றது.

அப்போது மற்றைய பஸ்ஸில் வந்த ஒருவர் என்னிடம் ஓடிவந்து, ‘அனந்தி அக்கா, நல்லவேளை நீங்கள் வந்து விட்டீர்கள். அங்கு ஆர்மி உங்களைத் தேடுகின்றார்கள்’ என்றார்.

விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்களோடு அவர்களின் குடும்பத்தினரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர் என்பது, அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

எனது கணவர் எழிலன் இராணுவத்தினரிடம் சரணடைந்தமையை நான் நேரில் கண்டதை, நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியங்களின் போதும் நான் தெரிவித்தேன்.

இராணுவத்தினரிடம் சரணடைவதற்காக எழிலன் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களை அழைத்துச் சென்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் கூட அதற்குப் பின்னர் திரும்பவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.