ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சருக்கும் சபையில் நன்றி தெரிவித்த செல்வம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்ட 8 பேரில் சட்டச் சிக்கலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று (10) விடுதலை செய்யப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்காலநாதன் ஜனாதிபதிக்கும், நீதி அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட எண்மரில் 4 பேர் சட்டச் சிக்கல் காரணிகளால் சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டனர்.
இவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வரில் மூவர் நேற்று விடுதலை செய்யப்பட்டமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்தார்.
மிகுதியாகவுள்ள ஒருவரையும் விரைவில் விடுதலை செய்யுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார்.