புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியினால் இன்றைய தினம் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புங்குடுதீவு 4ம் வட்டாரம் ஜே27கிராம சேவகர் பிரிவில் சிறிய குடிசை வீடு ஒன்றில் வசித்துவந்த தவராசா கவிதாவின் குடும்பத்தினருக்கு தியாகி அறக்கொடை நிறுவன இயக்குனரின் 15 இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் ராணுவத்தினரால் கட்டப்பட்ட வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனவிரத்ன அவர்களினால் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த வீடு இரண்டு மாதங்களும் 9 நாட்களுக்குள் ராணுவத்தினரால் மிக வேகமாக கட்டி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் தியாகி அறக்கொடை நிதிய இயக்குனர், ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி…
மிகவும் குறுகிய காலத்தில் இந்த வீட்டை குடும்பத்திற்கு ராணுவ வீரர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிதி அன்பளிப்பினை வழங்கி வைத்த தியாகி அறங்கொடை நிதிய இயக்குனரின் உதவியோடு ஒரு வீட்டினை இந்த வீடற்ற சாதாரண குடும்பத்தினருக்கு வழங்கி வைப்பதில் பெருமை அடைகின்றேன்.
அத்தோடு இனிவரும் காலங்களிலும் இவ்வாறான வீடற்றவர்களுக்கு கொடையாளிகளின் நிதிப் பங்களிப்போடு அமைத்துக் கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம். அத்தோடு ராணுவம் என்ற வகையில் இனம் பாராது, மொழி பாராது நல்லிணக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்றவே இந்த ராணுவம் உள்ளது.
அந்த உணர்வின் அடிப்படையில் வடக்கில் மக்களுக்கு எமது சேவையை வழங்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.