முதலில் இருந்தே அதிரடியாக விளையாட நினைத்தோம் – ஜோஸ் பட்லர்!
எங்களது அணியில் உள்ள பேட்டிங் வரிசை மிக பலமானது என்று நான் நினைக்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அடிலெய்டில் நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களையும் அடித்து இங்கிலாந்து அணியை மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பின்னர் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாக நினைக்கிறேன். இதுவரை நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. மேலும் இந்த அரையிறுதி போட்டி வரை நாங்கள் வந்தது மிகச்சிறப்பாக இருந்தது. இந்த இடத்தில் நாங்கள் வெற்றியுடன் நிற்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த போட்டியில் எங்களது அணியில் உள்ள 11 வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்த இடத்தில் எங்களை நிற்க வைத்துள்ளனர். நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதலில் இருந்தே அதிரடியாக விளையாட நினைத்தோம்.
அந்த வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளோம். அதேபோன்று எங்களது அணியில் உள்ள பேட்டிங் வரிசை மிக பலமானது என்று நான் நினைக்கிறேன்.
அந்த அளவிற்கு அனைவரும் பேட்டிங் செய்யும் திறமையை பெற்றுள்ளனர். குறிப்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் இந்த மைதானத்தின் அளவுகளை சரியாக கணித்து தனது மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
பேட்டிங்கில் அவர் எங்களுக்கு அளித்த பங்களிப்பு அபரிவிதமானது. அதேபோன்று பந்துவீச்சில் கிரிஸ் ஜோர்டானுக்கு நாங்கள் பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். ஏனெனில் இறுதி கட்டத்தில் டெத் ஓவர்களில் மூன்று ஓவர்களை அவர் மிகச் சிறப்பாக வீசி இருந்தார்.
ஏற்கனவே இது போன்ற பிரஷரான சூழலில் பல்வேறு முறை எங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசியுள்ள அவர் இம்முறை பாண்டியாவிற்கு எதிராக அற்புதமாக பந்துவீசி எங்களுக்கு உதவினார்.
இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம்” என தெரிவித்தார்.