ஜனாதிபதிக்கு மனோ எம்.பி. அவசர கடிதம்.
மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன்.
இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.
ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.
இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.