அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்ற மொட்டு – ஐ.தே.க இடையே போட்டா போட்டி!
மொட்டு கட்சியான ராஜபக்ச அணியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தத்தமது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் அதிருப்தி காரணமாக அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குழுவை மீண்டும் பலப்படுத்த எஸ்.பி.திஸாநாயக்க தலைமையில் அரசாங்கத்திற்குள் அழுத்தமான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதியின் மீது செல்வாக்கு செலுத்துவதே அவர்களது பரப்புரையின் பிரதான நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது வரையில் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும், அவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தேவையற்ற பல பிரச்சினைகளை உருவாக்கும் என அரசாங்கத்தின் தலையீட்டுக் குழுவொன்று கருதுவதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, வஜிர அபேவர்தன , ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலரை அரசாங்கத்திற்குள் கொண்டு வந்து , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் பலப்படுத்துவதற்கு நீண்ட இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவரும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராகவுள்ள இரண்டு பலமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை தமது பிரசன்னம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அரசாங்கத்தில் தனது தரப்பை ஸ்திரப்படுத்துவதற்கும் தேவையற்ற செல்வாக்குகளைக் கையாள்வதற்குமான இடத்தை ரணில் விக்கிரமசிங்க இழந்துள்ளதாக அறியமுடிகிறது. தற்போதைய பின்னணியில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்க வேண்டியுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை மாற்றம் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக இடம்பெறுமாயின் அது திங்கட்கிழமையே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.