யாழில் பூசகர் வேடத்தில் வந்து 20 இலட்சம் பெறுமதியான சிவலிங்கம் திருட்டு!

யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குப் பூசகர் வழமை போன்று பூசைக்காக நேற்று சென்ற போதே சிவலிங்கம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதையடுத்து சி.சி.ரி.வி. காணொளிகளைச் சோதனை செய்த போது பூசகர் வேடத்தில் வந்த ஒருவர் சிவலிங்கத்தை திருடிச் சென்றமை தெரியவந்தது.
திருடப்பட்ட சிவலிங்கம் இந்தியாவின் காசி புனித பிரதேசத்திலிருந்து 1998ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது என்றும், 20 இலட்சம் ரூபா பெறுமதியானது என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுற்றிவர கடற்படையினரின் கடுமையான கண்காணிப்பு உள்ள நிலையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.