‘கல்ல எடுக்கப்போனேன்.. கிட்னியையே காணோம்’ – பதறிப்போன நோயாளி.. மருத்துவமனை மீது புகார்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுநீரக கல் அறுவை சிகிச்சைக்கு சென்றவரிடம் இருந்து சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லா தால் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் சந்திரா. 53 வயதான சுரேஷ் வீட்டுக் காவலாளியாக பணிபுரிந்து வருபவர். சுரேஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடி வயிற்றில் தீரா வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்கலாம் என அங்குள்ள தனியார் பரிசோதனை மையத்திற்கு சென்றுள்ளார் சுரேஷ்.
அந்த பரிசோதனை மையத்தில் இருந்த நபர் ஒருவர் அலிகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள், நல்ல சிகிச்சை தந்து குணப்படுத்திவிடுவார்கள் என பரிந்துரை செய்துள்ளார். அவர் பேச்சை நம்பி கேட்ட சுரேஷ், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அலிகரில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு சிறுநீரக கல் நீக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுரேஷ் தனது உறவினர்கள் வரட்டும் என்று கூற அதுவரை எல்லாம் காத்திருக்க முடியாது எனக் கூறி அன்றைய தினமே அறுவை சிகிச்சை செய்து விட்டனர். அடுத்த மூன்றாம் நாளே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜும் ஆனார்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி சுரேஷ் அடி வயிற்றில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அருகேயுள்ள மருத்துவமனையில் சென்று அல்ட்ராசவுன்ட் ஸ்கேன் செய்து பார்த்த போது தான் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் முடிவில் சுரேஷின் இடது சிறுநீரகம் காணாமல் போன அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனால் மிரண்டு போன சுரேஷ் அங்குள்ள காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தந்ததால் தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யார் என அடையாளம் தெரிவில்லை என சுரேஷ் புகாரில் கூறியுள்ளார். மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை தன்னிடம் ரூ.28,000 கட்டணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.