கோட்டா இறுதியில் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்! – டலஸ் காட்டம்.

“குடும்ப அரசியலை முன் நிறுத்தாது புதிய அரசியல் முறைமை ஒன்றை உருவாக்குவார் என்று நம்பித்தான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், அவர் எம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2019 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்குக் கடும் போராட்டம் நடத்தினோம்
அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராகத் தெரிவு செய்தோம்.
அவர் ராஜபக்ச குடும்ப அரசியலை நிலைநிறுத்தமாட்டார். அரசியல் முறைமை மாற்றம் ஒன்றைச் செய்வார் என்று நம்பினோம்.
அவர் ராஜபக்ச குடும்பம் அணியும் சால்வையைக்கூட அணிய மறுத்தார். இதனால் அவர் மீது பெரிய நம்பிக்கை ஒன்று இருந்தது எங்களுக்கு. ஆனால், அவர் இறுதியில் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்” – என்றார்.