ஜனாதிபதியுடன் பேச்சுக்குச் செல்ல முன் நிபந்தனை விதியுங்கள்! – தமிழ்க் கட்சிகளுக்கு டலஸ் ஆலோசனை.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று பேச்சு மேசைக்குத் தமிழ்க் கட்சிகள் செல்வதாயின் ஜனாதிபதியிடம் நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும்.”
இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவது போல் புதிய அரசமைப்புக்கும், அரசியல் தீர்வுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மாத்திரம் தமிழர்களின் பிரச்சினை இல்லை. அவர்களுக்குப் பல பிரச்சினைகளை உண்டு. எனவே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காலத்தை இழுத்தடிக்காமல் குறுகிய காலத்தில் – அடுத்த வருடத்தில் தீர்வு காணப்படும் நோக்குடன் பேச்சுக்கள் அமைய வேண்டும்.
அதன் பிரகாரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமாயின் அதனை நாங்கள் ஆதரிப்போம்.
ஆனால், ஜனாதிபதி தலைமையிலான அரசு தீர்வுத் திட்ட விடயத்துக்கு இறங்கி வருமா என்பது சந்தேகம். அதேவேளை, இந்த அரசு நிலையான அரசும் இல்லை.
‘மொட்டு’வின் ஆட்சியையும் தனது ஜனாதிபதி பதவியையும் தக்கவைக்கும் நோக்குடன் தமிழ்த் தரப்பினரை பேச்சு என்ற மேசைக்கு அழைத்து காலத்தை வீணடிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க முயல்கின்றாரா என்ற சந்தேகம் எம்மிடம் உண்டு. இதை உணர்ந்து தமிழ்த் தரப்பினர் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனது நிலைப்பாட்டை அறிந்துதான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காமல் என்னை ஆதரித்தார்கள்” – என்றார்.