உடல் உறுப்பு தானத்தால் இருவருக்கு வாழ்வு கொடுத்த 18 மாத குழந்தை!
ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த நபரின் 18 மாத குழந்தை மஹிரா. இந்தக் குழந்தை சமீபத்தில் தனது வீட்டு பால்கனியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில்,புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை மூளை சாவு அடைந்தது.
இந்நிலையில், மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் தீபக் குப்தா மஹிராவின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்த தேவையை எடுத்துரைத்து மஹிராவின் உடல் உறுப்புக்களை தானம் செய்யக் கோரிக்கை வைத்தார்.மருத்துவரின் கோரிக்கையை மஹிராவின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில், மஹிராவின் கல்லீரல் 6 மாத குழந்தைக்கு பொருத்தப்பட்டது. அதேபோல், மஹிராவின் இரு சிறுநீரகங்களும் 17 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணத்திற்குப் பின்னும் இரு உயிர்களுக்கு வாழ்க்கை தந்துள்ளார் மஹிரா. மேலும், மஹிராவின் கருவிழிகளையும் மருத்துவர்கள் பாதுகாத்து வைத்துள்ளனர்.
மஹிராவின் உறுப்பு தானம் குறித்து பேசிய மருத்துவர் தீபக், “நம் நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு பலர் தயங்குகின்றனர். மூளைச்சாவு அடைந்தவர்களால் பலர் வாழ்வை காக்க முடியும் என்பது அனைவரும் உணர வேண்டும். உலகிலேயே மிகக் குறைவான உறுப்பு தானம் என்பது இந்தியாவில் தான் உள்ளது. நமது நாட்டில் 10 லட்சம் எண்ணிக்கைக்கு 0.4 என்ற அளவில் தான் உறுப்பு தானம் வழங்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இதன் விழிப்புணர்வு சிறப்பாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உறுப்பு தானம் செய்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் இது மிகக் குறைவாகவே உள்ளது. அதேவேளை அன்மை காலமாக இது குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தாண்டில் 14 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். 1994க்குப் பின் இந்த எண்ணிக்கையே அதிகமாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.