கோட்டா போல் வடக்கு ஆளுநரையும் விரட்டியடிப்பர் மக்கள்! – சரவணபவன் எச்சரிக்கை.
“தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எமது மக்களின் காணிகளை படைகளுக்குச் சுவீகரித்துக் கொடுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் மிகக் கேவலமான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு ஆளுநரின் முயற்சியை முளையிலே கிள்ளியெறியவேண்டும். இந்த மாகாணத்தின் மக்களுடன் ஆராயாமல், மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அதிகாரிகளை வரவழைத்து அவர்களை நிர்ப்பந்தித்து முப்படையினருக்கும் காணிகளை தாரைவார்க்கும் செயற்பாட்டை ஏற்க முடியாது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (15) நடைபெறவுள்ள கூட்டத்தை ஆளுநர் நிறுத்தாவிட்டால், மக்களின் போராட்டத்தை அவர் சந்திக்க நேரிடும் என்பதுடன் முன்னைய ஆட்சித் தலைவர் கோட்டாபய ராஜபக்ச எப்படி தப்பியோடினாரோ அதேபோன்று செல்ல நேரிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.