‘கவலைபடாதீங்க.. மீண்டு வருவேன்’ – உயிரிழந்த மாணவியின் கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்ட்ஸ்
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்றதால், மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். உயிரை காப்பாற்ற வழியில்லாமல், வேதனையோடு கால்பந்து வீராங்கனையின் கால்களை அகற்ற சம்மதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் இன்று எதிர்பாராத விதமாக அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முதல் நாள் வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கும், நான் சீக்கிரமாகவே ரெடி ஆகி மீண்டு வருவேன் அதனால் யாரும் கவலை படாதீர்கள் மாஸா வருவேன். எனது விளையாட்டு என்னை விட்டு எப்போதும் போகாது. நீங்கள் நான் வருவேனு நம்பிக்கையோடு காத்திருங்கள் என அத்தனை தன்னம்பிக்கையாக பதிவிட்டிக்கிறார்.
இதனை கண்ட பலரும் மருத்துவர்களின் சிறு அலட்சியத்தால், ஒரு பெரிய வீராங்கனையின் கனவு சிதைந்து விட்டதாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.