சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா – எதில் தெரியுமா?
2021-22 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 19% உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் எஜுகேஷன் வெளியிட்ட சர்வதேச மாணவர்களின் வருடாந்திர ஆய்வான ஓபன் டோர்ஸ் (Open Doors Report) அறிக்கையிலிருந்து இந்த புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.
இந்த ஆண்டு அமெரிக்க மாணவர் விசாவைப் பெறுவதில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்று புதுதில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 5,80,000 மாணவர்களுக்கு விசாக்களை அமெரிக்கா வழங்கியது. அதில் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட 62,000 விசாக்களை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா 82,000 விசாக்களை வழங்கியுள்ளது.
இந்த காலண்டர் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் மாணவர் விசாக்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் பெரும் பங்கு பட்டதாரி மாணவர்களால் ஏற்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, சீனா அதன் கடுமையான கோவிட் -19 கட்டுப்பாடுகளின் விளைவாக மாணவர்கள் விசா எண்ணிக்கை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது. தனிமைப்படுத்தும் விதிமுறைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் சீன மாணவர்களுக்கு விசா பெறுவதை கடினமாக்கியது.
ஒரு சாதாரண ஆண்டில், சுமார் 110,000-120,000 சீன மாணவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் 50,000 ஆகக் குறைந்துள்ளது.
கணிதம், கணினி அறிவியல், பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை ஆகியவை அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களிடையே மிகவும் பிரபலமான மூன்று துறைகளாகும்.