‘மைனர் என்றாலும் உண்மையான காதல் குற்றமல்ல’ – போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு

போக்சோ சட்டத்தின் நோக்கம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதே தவிர இளைஞர்களுக்கு இடையேயான பரஸ்பர காதல் உறவுகளை குற்றமாக்குவது அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
2021 இல் திருமணம் செய்ய வற்புறுத்தி தனது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கடத்தியதாக குற்றம் சாட்டி மைனர் பெண் ஒருவரின் தந்தை காவல்துறையில் வழக்கு பதிந்துள்ளார். அதன் அடிப்படையில், டெல்லி காவல் துறையால் கைது செய்யப்பட்ட இளைஞரின் ஜாமீன் வழக்கு விசாரணையில் நீதிபதி ஜஸ்மீத் சிங் வெளியிட்ட கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கு பதிவு செய்த நபர் மகளும், இளைஞரும் காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் பெண்ணின் தந்தை போக்கோ சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக அந்த இளைஞன் 2021 டிசம்பர் 31 முதல் காவலில் இருந்து வருகிறார். 1 வருடமாக காவலில் இருக்கும் அவர் தற்போது ஜாமீன் கோரியுள்ளார்.
அவரது வக்கீல் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அந்த சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் அந்த இளைஞருடன் வந்ததாக தெரிவித்தார். 2021 அக்டோபர் 27 அன்று அந்த பெண் இளைஞரின் வீட்டிற்கு வந்ததாகவும், மறுநாள் அவர்கள் பஞ்சாப் சென்று திருமணம் செய்துகொண்டதாகவும் கூறினார்.
மேலும் அந்த இளம்பெண்ணே தனது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை கடந்த ஆண்டு அணுகியதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், சிறுமிக்கும் அவரது கணவருக்கும் போதிய மற்றும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆயினும் தற்போதும் போலீஸ் காவலில் இருக்கும் இளைஞரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி “என் கருத்துப்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதே போக்சோவின் நோக்கம். இளம் வயதினருக்கிடையிலான ஒருமித்த காதல் உறவுகளை குற்றமாக்குவது ஒருபோதும் நோக்கமாக இருக்கவில்லை” என்றார்.
“இருப்பினும், இது ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து பார்க்கப்பட வேண்டும். பாலியல் குற்றத்தில் இருந்து தப்பியவர், அழுத்தம் கொடுத்து அல்லது அச்சுறுத்தி சொல்ல வைத்ததாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்த வேண்டும் ” என்று அவர் எச்சரித்தார்.
நீதிபதி சிங், அரசு வழக்கறிஞர் முன்னிலையில் தனிப்பட்ட அறையில் சிறுமியுடன் உரையாடியபோது திருமணத்தின் போது அவளுக்கு 17 வயதாக இருந்ததாகவும் எந்த விதமான மிரட்டல், அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது வற்புறுத்தலுக்கு உட்படாமல், தனது சொந்த விருப்பத்தின் பேரில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், இன்றும் அவருடன் இருக்க விரும்புவதாகவும் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
இது பெண்ணை வற்புறுத்திய வழக்கு அல்ல. அந்த பெண் தானாக அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டது தெரிய வந்துள்ளது. இது அவர்களுக்கு இடையேயான காதல் உறவு என்பதை தெளிவுபடுத்துகிறது. திருமணம் மற்றும் அவர்களுக்கிடையேயான பாலியல் உறவு இருவர் சம்மதத்துடன் இருந்தது.
பாதிக்கப்பட்டவர் சிறியவராக இருந்தாலும், அவளது சம்மதத்திற்கு எந்த சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என்றாலும், ஜாமீன் வழங்கும்போது அன்பின் காரணமாக ஏற்பட்ட சம்மதமான உறவின் உண்மைத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டு அந்த இளைஞருக்கு ஜாமின் அளித்துள்ளார்.