தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்க ஐ.நாவின் பங்களிப்பு அவசியம்.

“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே குரலில் வலியுறுத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் அடங்கலான குழுவினரை இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தனர்.

கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் அரசியல் ஸ்தீரத்தன்மை அற்ற நிலைமை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு பற்றியும் எடுத்துக் கூறினோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.