ஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்
ஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?
ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தலை பெறலாம். ஆவாரம்பூவின் பட்டை, வேர், இலை என அத்தனையும் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.
ஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
ஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும். தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.
ஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.