சம்பந்தனின் கூட்ட அழைப்பை தமிழ்க் கட்சிகள் புறக்கணிப்பு! சுமந்திரன் விடுத்தமையால் வந்தது வினை.
‘சமஷ்டியே தமிழர் அபிலாஷை’ என ஒரு குரலில் பேச வாருங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மூலம் விடுத்த அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாம் கூண்டோடு புறக்கணித்தன.
அதனால் இனி தமிழ்க் கட்சிகளைக் கூட்டி அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்பார்த்தபடி அவரிடம் ஒப்படைத்து, கூட்ட அழைப்பு விடயத்தைக் கை கழுவினார் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன்.
சுமந்திரன் மூலம் சம்பந்தன் விடுத்த அழைப்பின்படி நேற்று மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.
ஆக சுமந்திரனும் மாவை சேனாதிராஜா மட்டுமே அங்கு கூட்டத்துக்கு வந்திருந்தனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட அங்கு சமுகம் தரவில்லை.
கூட்டம் நடைபெறாமல் போனதன் பின்னணி குறித்து சம்பந்தன் முழுமையாக அறிந்துகொண்டார் எனத் தெரியவந்தது. மற்றைய கட்சித் தலைவர்களோடு தொடர்பு கொண்டு விடயத்தைப் பின்னால் இருந்து இயக்கிய சூத்திரதாரி தங்கள் மத்தியில் இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார் எனவும் தெரியவந்தது.
நேற்று மாலை தம்மைச் சந்தித்த சுமந்திரன் மற்றும் மாவையிடம் சம்பந்தன் பின்வருமாறு கூறினார் என அறியவந்தது:-
“கூட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் அதன் தலைவராக நானே விடுத்தேன். என் சார்பில் கூட்டமைப்புப் பிரதிநிதியாக சுமந்திரன் அதனை அனுப்பி வைத்தார். நீங்கள் (மாவை) இந்தச் சமயத்தில் கொழும்பில் நிற்பீர்கள் என்பதால் அப்படி நேரம், திகதியை நானே தீர்மானித்தேன். உங்களுக்கு வசதியான தீர்மானம்தான் இது. ஆனால் கூட்டத்துக்கு யாரும் வரவில்லை.
என் அழைப்பையும், எனது வீட்டில் சந்திப்பதையும் அவர்கள் விரும்பவில்லைப் போலும். அதுதான் நிலைமை என்றால் நீங்களே (மாவையே) பொறுப்பெடுத்து ஏற்பாடு செய்து அழையுங்கள். திகதி, நேரம், இடத்தைத் தீர்மானியுங்கள். அங்கு நான் வருவேன்” – என்று கூறி விடயத்தை மாவையிடம் கை கழுவி விட்டார் சம்பந்தன்.