தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு!
தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய நூலின் வெளியீட்டு விழா விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பலர் விசிக கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். அதில், “அரசியல் என்பது அதிகாரத்திற்காக, பதவிக்காக, பொருள் ஈட்டுவதற்காக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மிக குறைந்த சிலர் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கின்றனர். எல்லா கட்சிகள் அப்படிப்பட்டவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர்” என தெரிவித்தார்.
“ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை தான் உழைக்கும் மக்களின் எதிரி, இவை சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், குடும்பம் என எந்த வடிவிலும் இருக்கலாம். அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி என்பது வன்முறை முழக்கம் அல்ல. வன்முறைக்கு எதிரான முழக்கம். உலகில் ஒடுக்குமுறைக்கு உள்ளான அனைவரின் முழக்கம்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு எனும் தனி நாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என பேசினார்.