ராகிங் தடுப்பு.. உடனடியாக இதை செய்யுங்க – அதிரடி உத்தரவிட்ட தமிழக டிஜிபி!
கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்க முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதை உறுதி செய்வது உள்ளிட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக காவல் உயர்அதிகாரிகளுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் ராகிங் தடுப்புக்குழு, ராகிங் எதிர்ப்புப் படை, ராகிங் கண்காணிப்பு பிரிவு ஆகியவை இருக்க வேண்டும் என்றும் காவல்துறை மாவட்ட அளவில் ராகிங் தடுப்புக்குழுக்களை செயல்படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவன வளாகத்தில் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும், ராகிங் தடுப்பு குறித்து கல்வி நிறுவன வளாகத்தில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலாம்ஆண்டு மற்றும் சீனியர் மாணவர்கள் இடையே இணக்கம் ஏற்படுத்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனம் எடுத்த நடவடிக்கை மீது திருப்தி இல்லாமல், தரப்படும் புகார் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் செய்தால் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ராகிங் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.