வேலையிழந்த இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்த ட்ரீம்11 நிறுவனம்.!

கோவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலகெங்கிலும் உள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே பணியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக நீக்கி வருகின்றன.
வருவாய் வீழ்ச்சி, குறைவான விளம்பரதாரர்கள் மற்றும் நிதியுதவி சிக்கல் காரணமாக குறிப்பாக தொழில்நுட்பத்திற்கான உலகின் தலைசிறந்த மையமாக திகழும் சிலிக்கான் வேலி (Silicon Valley) பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான தொழில்நுட்ப ஜாம்பவான்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன. ட்விட்டர், மெட்டா, ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கி ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களும் திடீரென தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
ஒருபக்கம் மெட்டா நிறுவனம் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு அந்த நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மைக்ரோசாப்ட், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்டநிறுவனங்களும் தங்கள் ஊழியர்களில் பலரை நீக்கியுள்ளன.
வேலையிழந்த இந்தியர்கள் தாங்கள் வேலைபார்த்த நாட்டிலேயே தங்கி அடுத்த வேலையை தேடுவதா அல்லது நாடு திரும்புவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் Dream11 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஹர்ஷ் ஜெயின், பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியர்களே நீங்கள் நம்பிக்கையுடன் தாயகம் திரும்பி வாருங்கள். நான் உங்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை வழங்குகிறேன் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். முக்கியமாக எச்1பி விசா பிரச்சனையில் சிக்கியவர்கள் தாமதமின்றி நாட்டிற்கு திரும்புங்கள் என்றும் கூறி இருக்கிறார்.
உள்நாட்டு தொழில்நுட்ப சூழலை வலுப்படுத்தவும், வளர்க்கவும் விரும்பும் பல இந்திய தொழில்நுட்ப தலைவர்களில் ஹர்ஷ் ஜெயினும் ஒருவர் ஆவார். வெளிநாட்டில் வேலையிழந்து தவிக்கும் நீங்கள் தாயகம் திரும்பி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யலாமே என்றும் கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரபல சோஷியல் மீடியாவான ட்விட்டரில் ஹர்ஷ் ஜெயின் போஸ்ட் செய்துள்ள ட்விட்டில் வேலையிழந்த இந்தியர்களுக்கு மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை சுமார் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ளது. இதற்கிடையே எங்களது டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் (டிசைன், ப்ராடக்ட், டெக்) சிறந்த திறமைகளை கொண்டிருப்பவர்களை மற்றும் தலைமை அனுபவம் உள்ளவர்களை தேடி கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த தருணத்தில் தனது இந்திய நிறுவனங்கள் லாபத்தில் இருப்பதாக கூறி பெருமிதம் தெரிவித்துள்ளார் ஹர்ஷ் ஜெயின். Dream Sports-ல் நாங்கள் 150 மில்லியன் யூஸர்கள் மற்றும் Fantasy Sports, NFT, Sports OTT, Fintech ஆகியவற்றில் 10 கிக்காஸ் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களைக் கொண்ட 8 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் நிறுவனம் என தனது இந்திய நிறுவனங்கள் லாபத்தில் இருப்பதாக ஹர்ஷ் ஜெயின் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.